அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோயில், திருச்சிராப்பள்ளி - 620002, திருச்சிராப்பள்ளி .
Arulmigu Thayumanaswamy Temple, Rock Fort, Thiruchirappalli - 620002, Thiruchirappalli District [TM025705]
×
Temple History
புராண பின்புலம்
தலவரலாறு
திருச்சி மாவட்டம், திருச்சி வட்டத்தில் ,திருச்சி மாநகரின் மையப்பகுதியில் மலைக்கோட்டைப்பகுதியில் அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோயில் உள்ளது. இத்திருக்கோவில் சுமார் 1400 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். நவீன கருவிகள் ஏதும் இல்லாத அக்காலத்தில் 273 அடிய உயர மலையில் 417 படிகளுடன் இத்திருக்கோவில் கட்டப்பட்டுள்ளது. இத்திருக்கோவில் பண்டைய தமிழக கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகவும் , நேர்த்தியான அமைப்புடன் மலையின் மீது திட்டமிட்டு கட்டப்பட்டுள்ளதால் முன்னோர்களின் திறமைக்கு சான்றாக விளங்கி வருகிறது.
மலையின் மேற்பகுதியில் உச்சிபிள்ளையார் சன்னதியும், நடுப்பகுதியில் தாயுமானவர் மற்றும் மட்டுவார் குழலம்மை சன்னதிகளும் அமைக்கப்பட்டு மூன்றடுக்கு கோவிலாக கட்டப்பட்டுள்ளது. உச்சிப்பிள்ளையார் சன்னதிக்கு செல்லும் வழியில் மகேந்திர வர்ம பல்லவனால் அமைக்கப்பட்ட...தலவரலாறு
திருச்சி மாவட்டம், திருச்சி வட்டத்தில் ,திருச்சி மாநகரின் மையப்பகுதியில் மலைக்கோட்டைப்பகுதியில் அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோயில் உள்ளது. இத்திருக்கோவில் சுமார் 1400 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். நவீன கருவிகள் ஏதும் இல்லாத அக்காலத்தில் 273 அடிய உயர மலையில் 417 படிகளுடன் இத்திருக்கோவில் கட்டப்பட்டுள்ளது. இத்திருக்கோவில் பண்டைய தமிழக கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகவும் , நேர்த்தியான அமைப்புடன் மலையின் மீது திட்டமிட்டு கட்டப்பட்டுள்ளதால் முன்னோர்களின் திறமைக்கு சான்றாக விளங்கி வருகிறது.
மலையின் மேற்பகுதியில் உச்சிபிள்ளையார் சன்னதியும், நடுப்பகுதியில் தாயுமானவர் மற்றும் மட்டுவார் குழலம்மை சன்னதிகளும் அமைக்கப்பட்டு மூன்றடுக்கு கோவிலாக கட்டப்பட்டுள்ளது. உச்சிப்பிள்ளையார் சன்னதிக்கு செல்லும் வழியில் மகேந்திர வர்ம பல்லவனால் அமைக்கப்பட்ட குடைவரைக்கோவில் அமைந்துள்ளது. எனவே, 7ம் நூற்றாண்டை சேர்ந்த கோவில் என்பதை அறிய முடிகிறது. இத்திருக்கோவில் பிற்காலத்தில் சோழர்கள் , பாண்டியர்கள் மற்றும் நாயக்க மன்னர்கள் , விஜய நகர அரசர்களாலும் திருப்பணிகள் செய்து விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. திருச்சிக்கு அருகில் உள்ள கொடும்பாளூர் என்னும் ஊரிலிருந்து கற்கள் கொண்டு வரப்பட்டு இத்திருக்கோவில் கட்டப்பட்டுள்ளதாக தெரிகிறது. திருக்கோவிலில் இறைவன் தாயுமானவர் மேற்கு முகமாக காட்சியளிக்கிறார். இத்திருக்கோவிலில் சிவன், அம்பாள் தவிர ஜூரகேஸ்வரர், பைரவர், இடும்பர், சமயாசிரியர்கள் நால்வர், அறுபத்து மூன்று நாயன்மார்கள், கொற்றவை சிலைகளும் உள்ளன. இத்திருக்கோயில் தட்சிணா மூரத்தி தவக்கோலத்தில் அமர்ந்து காட்சியளிக்கிறார்.
இத்திருக்கோவில், திருச்சி விமான நிலையத்திலிருந்து 10 கி.மீ தொலைவிலும், திருச்சி புகைவண்டி நிலையத்திலிருந்து 5கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 5கி.மீ தொலைவிலும், சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து 1 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.
இத்திருக்கோவிலுக்கு அருகில் கீழ்க்கண்ட முக்கியத்திருக்கோவில்கள் அமைந்துள்ளது.
1.அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் - ஸ்ரீரங்கம்
2.அருள்மிகு ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி திருக்கோயில் -திருவானைக்காவல்
3.அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் சமயபுரம்
4.அருள்மிகு வெக்காளியம்மன் திருக்கோயில் உறையூர்
5.அருள்மிகு கமலவல்லிநாச்சியார் திருக்கோயில் உறையூர்
6.அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரசுவாமி திருக்கோயில் உறையூர்
7.அருள்மிகு உத்தமர் திருக்கோயில், பிச்சாண்டார் கோயில்( திருக்கரம்பனூர்)
8.அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் திருப்பட்டூர்
9.அருள்மிகு நீலிவனேஸ்வரர் திருக்கோயில் திருப்பைஞ்சலி
10.அருள்மிகு சுத்தரெத்தினேஸ்வரசுவாமி திருக்கோயில் ஊட்டத்தூர் .
தாயுமானவர் வரலாறு
திருக்கோயிலில் இறைவனே தாயாக வந்து சுகப்பிரசவம் பார்த்ததால் தாயுமானசுவாமி என்று அழைக்கப்படுகிறார். இங்கு பிரார்த்தனை செய்யும் பெண்களுக்கு சுகப்பிரசவம் உண்டாகும்.
முன்னொரு காலத்தில் திரிசிராமலையில் தனகுப்தன் என்னும் வணிகன் தனது மனைவி இரத்தினாவதியுடன் வாழ்ந்து வந்தான். இரத்தினாவதி செவந்திநாதரின் தீவிர பக்தை ஆவாள். தனது பேறு காலம் நெருங்கவே இரத்தினாவதி தனது தாயை உதவிக்கு வருமாறு அழைத்தாள் . அவளது தாயாரும் பூம்புகாரிலிருந்து தேவையான மருந்துகள் மற்றும் எண்ணெய் ஆகியவற்றுடன் தனது மகளின் பிரசவத்திற்கு புறப்பட்டாள் . காவிரியில் வெள்ளப்பெருக்கு காரணமாக தாயாரால் உரிய நேரத்தில் வர இயலவில்லை.இரத்தினாவதி சிவபெருமானை வேண்டியதையடுத்து செவ்வந்தி நாதரே தாய்வேடம் தரித்து நிறைபேற்றுடன் தவித்து கொண்டு இருந்த இரத்தினாவதிக்கு தக்க மருத்துவம் பார்த்து தாயையும், பிறந்த ஆண்மகனையும் ஏழு தினங்கள் தக்கவாறு கவனித்துக் கொண்டார். இரத்தினாவதியின் உண்மையான தாயார் வந்ததும் சிவன் அவ்வுருவில் இருந்து மறைந்து மட்டுவார் குழலம்மையுடன் காட்சியளித்தார். இறைவன் கர்பிணிப்பெண்ணிற்கு தாயாக இருந்து உதவிபுரிந்தமையால் அன்னாளில் இருந்து தாயுமானவர் என அழைக்கப்படுகிறார்.இந்நிகழ்ச்சியை நினைவூட்டும் விதமாக இன்றும் செட்டிப்பெண் மருத்துவம் என்ற விழா சித்திரை மாதத்தின்போது கொண்டாடப்படுகிறது.
தலபுராணம்
சிராப்பள்ளி என்றழைக்கப்படும் திருச்சிராப்பள்ளி , மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானவர் திருக்கோவில் பழம்பெருமை மற்றும் புராதனச்சிறப்பு மிக்கது ஆகும். தென்கயிலாயம் என்றழைக்கப்படும் இத்திருக்கோவில் இறைவன் முதலில் மலைக்கொழுந்தூர் ஈசர், செவ்வந்தி நாதர் எனவும் அழைக்கப்பட்டு பின்னர், தனது பக்தையான கர்பிணிப்பெண் ஒருவருக்கு தாயார் உருவில் வந்து மகப்பேறு மருத்துவம் செய்ததால் தாயுமானவர் என்றழைக்கப்பட்டார்.
இத்திருக்கோவில் அமைந்துள்ள மலை திருசிரா மலை, திரிசிர கிரி, முத்தலை மலை, பிரமகிரி மலை என்றும் பெயர்களால் அழைக்கப்படுகிறது. திருக்கோவில் அமைந்துள்ள இடத்திற்கு முன்னர் திரிசிர புரம் எனவும் அழைக்கப்பட்டுள்ளது. திரிசிரன் என்ற அரக்கன் சிவனை வழிபட்டு பலவித பேறுகளையும் பெற்றமையால் திரிசிர புரம் என்றும் பெயர் பெற்றுள்ளது என புராணங்கள் கூறுகின்றன.
திருக்கயிலையில் சிவபெருமானை வழிபட ஆதிசேஷன் வந்தபோது ஆதி ஆதிசேஷனுக்கும், வாயு பகவானுக்கும் இடையே யார் பெரியவன் என்றும் போட்டி ஏற்பட்டது எனவும் ஆதிசேஷன் தனது உடலால் கயிலாய மலையை இறுகப்பற்றிக்கொண்டு வாயுபகவானை வலிமையிருந்தால் விடுவிக்க கேட்டதாகவும் வாயுபகவான் பெருங்காற்றாக மாறி கயிலை மலையில் சிறுபகுதியை மட்டுமே ஆதிகேசவன் பிடியிலிருந்து விடுவிக்க முடிந்ததாகவும் புராண வரலாறு கூறுகிறது.
அவ்வாறு சிதறுண்ட சிறுபகுதி மூன்று பகுதிகளாக பூமியில் விழுந்தது எனவும் அதில் ஒன்று திருக்காளத்தி மலை எனவும், இரண்டாவது திரிகோண மலை எனவும் மற்றொன்று திரிச்சிரா மலை எனவும் கூறப்படுகிறது. திரிசிரா மலையில் ஈசன் சுயம்பு லிங்கமாக தோன்றி திரிசிரன் என்னும் அரக்கனால் கருவறை அமைக்கப்பட்டு சிவனை வழிபட்டமையால் திரிசிரபுரம் என்றழைக்கப்பட்டது.
முதலில் மலைக்கொழுந்து நாதர் என்றழைக்கப்பட்டார். சாராமா முனிவர் என்பவர் செவ்வந்தி மலர்களால் வழிபட்டு வந்தமையால் செவந்திநாதர் என்றழைக்கப்பட்டார். இறைவனுக்கு சமர்ப்பிக்க நந்தவனத்தில் பார்த்து வந்த பூச்செடிகளில் இருந்து பூக்களை யாரோ களவாடியதை அறிந்த முனிவர் விழித்திருந்து பூக்களை திருடுபவனை எச்சரிக்கிறார். அவன் அதனை சட்டை செய்யாமல் இருக்கவே சோழ மன்னனிடம் நடந்ததை முறையிட மன்னன் கள்வனை தண்டிக்காத காரணத்தினால் இறைவனிடம் முறையிடுகிறார். கிழக்கு முகமாக இருந்த இறைவன், மேற்கு முகமாக திரும்பி சோழ நகரான உறையூரை மண்மாரி தூற்றியதாக புராண வரலாறு கூறுகிறது. இதனால், இத்திருக்கோவிலில் சிவன் இன்றும் மேற்கு முகமாக காட்சியளிக்கிறார். அதன் பின்னர் சிவன் வெக்காளியம்மன் வேண்டுகோளிற்கிணங்க சினம் தணிந்ததாக கூறப்படுகிறது.
இலங்கை மன்னன் ராவணன், சீதையை கவர்ந்து சென்றதால் ராவணன் மீது இராமபிரான் போர் தொடுத்தபோது ராமனுக்கு, ராவணணின் தம்பி வீபிஷணர் உதவிபுரிந்தார். ராமனது பட்டாபிஷேகத்திற்கு அயோத்தி சென்று திரும்பும் போது தனது அன்பு பரிசாக விஷ்ணுவின் அம்சமான ரங்கநாதர் சிலை ஒன்றை வீபிஷணருக்கு ராமர் அளித்தார். அதனை , வீபிஷணர் இலங்கைக்கு கொண்டு சென்று பிரதிஷ்டை செய்ய விரும்பினார். ராமபிரான் மேற்படி சிலையை எங்கும் பூமியில் வைக்கக்கூடாது எனவும் , அவ்வாறு வைத்துவிட்டால் அதனை எடுக்க இயலாது எனவும், வீபிஷணரிடம் தெரிவித்திருந்தார். வீபிஷணன் இலங்கைக்கு செல்லும் வழியில் காவிரி கரையை கடந்து செல்லும் போது பொழுதுசாயும் நேரம் வந்துவிட்டதால் தனது நித்ய கர்மா அனுஷ்டானங்களை செய்ய திருச்சியில் தரையில் இறங்கினார்.
ரங்கநாதர் சிலையை வீபிஷணர் இலங்கைக்கு கொண்டு செல்வதை தடுக்க விரும்பிய தேவர்கள் இது குறித்து விநாயகரிடம் முறையிட்டனர். விநாயகரும், தேவர்களின் வேண்டுகோளிற்கிணங்க மாடு மேய்க்கும் சிறுவனாக வீபிஷணர் முன்பு தோன்றினார். அரங்கநாதன் சிலையை தரையில் வைக்கக்கூடாது என்பதால் அதனை தான் தனது நித்ய கர்ம-அனுஷ்டானங்களை செய்து முடிக்கும்வரை கையில் வைத்துக்கொண்டு நிற்க ஒருவரை தேடினார். அப்போது, மாடு மேய்க்கும் சிறுவன் வேடத்தில் இருந்த விநாயகரிடம் அச்சிலையை வைத்திருக்க வீபிஷணர் கேட்டுக்கொண்டார். வீபிஷணர் நீரில் மூழ்கி குளிக்கும்போது சிறுவன் வடிவில் இருந்த விநாயகர் அச்சிலையை தரையில் வைத்துவிட்டார் . இதனை அறிந்த வீபிஷணர் சிறுவனை துரத்த வீபிஷணர் மலையுச்சிற்கு சென்ற பின்னரே அவனைப் பிடிக்க முடிந்தது. வீபிஷணர் அச்சிறுவனை தலையில் ஒரு குட்டு வைத்து தண்டித்தபோது விநாயகர் தனது சொந்த உருவில் காட்சியளித்து வீபிஷணனுக்கு அருள் புரிந்தார். மேலும், ரங்கநாதர் சிலை திருச்சியில் காவிரியின் இரு கரைகளுக்கிடையில் நிறுவப்படவேண்டியது என்பது ஏற்கனவே, தீர்மானிக்கப்பட்ட ஒன்று என்பதை விளக்கினார். வீபிஷணர் தனது தவறையுணர்ந்து மன்னிப்புக்கோரினார். விநாயகர் ரங்கநாதர் சிலையை தரையில் வைத்த இடமே தற்போது ஸ்ரீரங்கம் என்றழைக்கப்படுகிறது.